அடிசில்: October 2010

Sunday, October 31, 2010

இன்றைய ஸ்பெஷல் : காதல் பூரி!

அட,இதுக்குக் கூடவா சமையல்குறிப்புக் கேப்பீங்க...?!!

 

தக்காளித் தொக்கு


பெரிய தக்காளி -3

வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 2

மஞ்சள் பொடி- 1/4 தேக்கரண்டி

வத்தல்பொடி - 1/2 தேக்கரண்டி

சாம்பார்ப்பொடி - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 2 இணுக்கு

எண்ணெய் - 3 தேக்கரண்டி

கடுகு, உளுத்தம்பருப்பு

உப்பு - தேவையான அளவு

தக்காளியையும் வெங்காயத்தையும் பொடியா நறுக்கிவச்சுக்கோங்க.
பச்சை மிளகாயைக் கீறிக்கோங்க.

வாணலியில் எண்ணெய்விட்டு, கடுகையும் கொஞ்சம் அதிகமாகவே உளுத்தம்பருப்பையும்போட்டு , கடுகுவெடிச்சதும் கறிவேப்பிலையைச் சேருங்க.

அடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து,சிறிது உப்பையும் சேர்த்து வதக்குங்க.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியைப்போட்டு, தக்காளி கரையுமளவுக்கு வதக்குங்க.

வதக்கும்போதே, மஞ்சள்,வத்தல் சாம்பார்ப்பொடிகளையும் சேர்த்து வதக்கி, உப்பு சரிபார்த்து, எண்ணெய் பிரிந்துவரும் சமயத்தில் இறக்குங்க.

இந்தத் தக்காளித்தொக்கில், இதுமாதிரி,தண்ணீரே சேர்க்காமல்செய்தால், பயணங்களுக்கு எடுத்துச்செல்ல வசதியாக இருக்கும்.மறுநாள் வரைக்கும் கெடாமலும் இருக்கும்.

சப்பாத்தி, இட்லி தோசை எல்லாவற்றிற்கும் மேட்ச் ஆகும்.

*****************

Saturday, October 30, 2010

தேங்காய் தக்காளிச் சட்னி



தக்காளியில்லாம சமையலா..?சான்சே இல்லன்னுதான் சொல்ற அளவுக்கு தக்காளி நம்ம வீடுகளில் பிரபலம். அது,இவ்வளவு பிரபலமாயிருக்க என்ன காரணம்னு நீங்க யோசிக்கலாம். முதலாவதா குண்டா, பளபளன்னு கண்ணைப்பறிக்கிற அதோட கலர்,அப்புறம் அதிலிருக்கிற அபரிமிதமான சுவை.

ஆனா,இதெல்லாம் தவிர இன்னும் நிறைய இருக்கு தக்காளியில. என்னன்னா, புற்றுநோயைத் தவிர்க்க உதவும் ஆன்டிஆக்ஸிடெண்ட் எனும் பொருள் இதில் மிக அதிகமாக இருக்கிறது. இதுமட்டுமில்லாம,விட்டமின் ஏ, விட்டமின் சி இரண்டும்கூட இதில் நிறைய இருக்கிறது. அதனால தக்காளியை உணவில் அதிகம் சேத்துக்கோங்க. அதுவும் சமைக்காம அப்படியே சேர்த்துக்கிட்டா ரொம்பவும் நல்லது.

இந்தச் சட்னியில, நாம தக்காளியை அவிக்காம,வதக்காம அப்படியோ பயன்படுத்துவதுதான் சிறப்பு.

தேவையான பொருட்கள்...

தேங்காய் - அரை மூடி

பொட்டுக்கடலை - ஒரு கைப்பிடி

பச்சை மிளகாய் - 5 அல்லது ஆறு

பூண்டு - 1 பல்

பழுத்த தக்காளி - 1

கறிவேப்பிலை - 10-15,

உப்பு - தேவைக்கேற்ப

தாளிக்க...

எண்ணெய் - 2 தேக்கரண்டி

கடுகு மற்றும் உளுத்தம்பருப்பு

தேங்காயுடன், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய் உப்புச்சேர்த்து, மிக்சியில் ஒருநிமிடம் ஓடவிடுங்க. அப்புறம் தண்ணீர் சேர்த்து நல்லா அரைச்சுக்கோங்க. கடைசியில் நறுக்கிய தக்காளி,கறிவேப்பிலை,இவற்றோடு ஒரு பூண்டுப்பல்லையும் சேர்த்து சிறிதுநேரம் சுத்தவிட்டு எடுங்க. அழகான நிறமும் மணமுமான தேங்காய் தக்காளிச் சட்னி தயார்.

கடைசியில் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து, இட்லி தோசையுடன் பரிமாறுங்க.

Wednesday, October 27, 2010

பொரியரிசி உருண்டை


பொரியரிசி என்றதுமே, ஆச்சி வீட்டில், கருப்பட்டிக் காப்பிக்குள் கைநிறைய அள்ளிப்போட்டு ஊறவிட்டுக் குடித்த அன்றைய ஞாபகம்தான் நினைவில் வருகிறது.

இதுவும் குழந்தைகளுக்குச் சட்டென்று செய்துதரக்கூடிய சுவையான ஒரு பலகாரம்தான். கொஞ்சம் சாப்பிட்டாலும் வயிறு நிறைந்ததுபோலிருக்கும்.

புழுங்கலரிசி - 1 கப்

காய்ச்சிய பால் - 1 கப்

சர்க்கரை- தேவைக்கேற்ப

வெறும் வாணலியில், அரிசியைப்போட்டு, சிறுதீயில் வைத்துப் பதமாக வறுத்து எடுத்துக்கணும்.

வறுத்தெடுத்த அரிசியை ஆறவிட்டு மிக்சியில் நைசாகப் பொடிபண்ணிக்கோங்க.

பொடியாக்கிய மாவில் தேவையான சர்க்கரை கலந்து, வெதுவெதுப்பான பாலை ஊற்றிப் பிசைந்து, உருண்டைகளாகப் பிடிச்சுக்கோங்க.

சுவையான பொரியரிசி உருண்டை தயார். இதைக் குழந்தைகளுக்கு மாலை நேர டிபனாகச் செய்துதரலாம்.

*************************

Tuesday, October 26, 2010

முட்டை மிளகுப் பால்



நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்களில், குளிர்காலத்தில் வரக்கூடிய நெஞ்சுச்சளி, ஜலதோஷம் இவற்றிற்கெல்லாம் மருந்தாகத் தரப்படுவது இந்தப் பால்.

தயாரிப்பதும் பெருசா ஒண்ணும் கஷ்டமில்லை...

தேவையான் பொருட்கள்...

முட்டை - 1

பால் - 1 கப்

மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி

சர்க்கரை - 2 தேக்கரண்டி

முட்டையுடன் மிளகுத்தூள், சர்க்கரை இரண்டையும் சேர்த்து நல்லா நுரைவரும்படி அடிச்சுக்கணும்.

பாலைக் கொதிக்கவைத்து இறக்கி,நல்ல சூடாக இருக்கும்போதே, அடித்துவைத்த முட்டைக் கலவையில் ஊற்றி, நன்றாக ஆற்றவேண்டும். இந்தப் பாலை,சுடச்சுட ஒன்றிரண்டு நாட்கள் அருந்தினால், சளி ஜலதோஷமெல்லாம் பறந்துபோயிடும்னு சொல்லுவாங்க.

இங்கே, முக்கியமாகக் கவனிக்கவேண்டியது ரெண்டு விஷயம்...

ஒண்ணு, பால் நல்ல சூடா இருக்கணும்.

இன்னொண்ணு, முட்டைக் கலவையோட பாலைச் சேர்த்து வேகமாக ஆற்றவேண்டும். (டீக்கடையில டீ ஆற்றுவாங்கல்ல...அதுமாதிரி)
அப்பதான், பாலில் முட்டை திரிதிரியாக இல்லாமல் நன்றாகச் சேர்ந்திருக்கும்.

முயற்சிசெய்துதான் பாருங்களேன்...

*********************

நாட்டுத் தக்காளிக் கூட்டு


கூட்டுன்னு சொன்னதும் அவிச்சு பொரிச்சு செய்யக்கூடியதுன்னு நினைச்சிராதீங்க. இது கிராமங்களில் செய்யப்படும் அடுப்பிலேற்ற அவசியமில்லாத அவசரக் கூட்டு. இரவு உணவுக்கும் சட்டென்று கூட்டுவைக்க நேரமில்லாதபோதும் செய்யக்கூடியது, பருப்புக்குழம்பு, மற்றும் சாம்பாருடன் சேர்த்துச் சாப்பிட நன்றாக இருக்கும்.

தேவையான பொருட்கள்...

நாட்டுத்தக்காளி - 3

சின்ன வெங்காயம் - 20

சீரகம் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவைக்கு

தக்காளியை மெலிதாக நறுக்கிக்கோங்க.

சின்ன வெங்காயத்தையும் மெலிதாக நீளவாக்கில் அரிந்து வச்சுக்கோங்க.

கறிவேப்பிலையைக் கிள்ளிப்போடுங்க.

சீரகத்தை உள்ளங்கையில் வைத்து சிறிது நசுக்கிப் போடுங்க.

தேவையான உப்புப்போட்டுக் குலுக்கி ஐந்து நிமிடம் வைத்துவிட்டு, சுடுசாதத்துடன்  பரிமாறுங்க.

**************

எள்ளுப் பிடிஉருண்டை

இதுவும் அந்தக்காலத்தில் விரும்பிச் சாப்பிட்ட ஒரு பதார்த்தம்.
எள்ளும் வெல்லமும் சேர்த்தா உடம்புக்கு அத்தனை வலிமை கிடைக்குமாம்.
நீங்களும் சாப்பிட்டுப்பாருங்க.

கறுப்பு எள் - 1 1/2 கப்

பொடித்த வெல்லம் - 1/2 கப்

எள்ளை வாசனை வருமளவுக்கு வெறும் வாணலியில் வறுத்து எடுத்துக்கங்க.

ஆறியதும் வெல்லத்தோடு சேர்த்து மிக்சியில் அரைச்சு எடுத்து சின்னச்சின்ன உருண்டைகளாகப் பிடிச்சுக்கங்க.

வாசம் ஊரைக் கூட்டும். ருசியோ அடிக்கடி செய்யச்சொல்லிக் கேட்கும்.

**************

இடியரிசி



அம்மா பசிக்கிதும்மான்னு பிள்ளைகள் சொல்லிட்டாப்போதும். உடனே பிஸ்கெட் சாப்பிடுறியா, சிப்ஸ் தரட்டுமா, சாக்லெட் வேணுமான்னுதான் கேட்கிறோம் இப்ப. ஆனா அந்தக்காலத்தில் அவசரமா ஆரோக்கியமா அப்பப்ப தயாரிச்ச தின்பண்டங்களைக் கொடுத்தாங்க குழந்தைகளுக்கு.

அப்படிப்பட்ட ஒண்ணுதான் இடியரிசி. பச்சரிசியை, அதிலும் தீட்டாத சிவப்பு நிறமுள்ள அரிசியைப் பத்தே நிமிஷம் ஊற வச்சு,அதோட தேங்காயையும்,அச்சுவெல்லத்தை அல்லது கருப்பட்டியையும் கலந்து, உரல்ல பதம்மா இடிச்சு, பக்குவமா உருட்டிக் குடுப்பாங்க பாருங்க...அத்தனை ருசியா இருக்கும்.

அதே பழைய ருசியை, உங்க குழந்தைகளும் கொஞ்சம் அனுபவிக்கக்கொடுங்களேன்...

இதோ, தேவையான பொருட்கள்...

பச்சரிசி - 1 1/2 கப்
தேங்காய் - 1/2 மூடி
சர்க்கரை அல்லது பொடித்த வெல்லம் - 1/2 கப்

அரிசியைப் பத்து நிமிஷம் ஊறவச்சு, தண்ணீரை வடிய விடுங்க.

தேங்காயை சிறு துண்டுகளாக நறுக்கி வச்சுக்கங்க.

மிக்ஸியில் அரிசியைப்போட்டு, அரிசி ஓரளவு குருணையாக மாறினபிறகு, அதில் தேங்காய் துண்டுகளையும்போட்டு ஓட விடுங்க.

ஓரளவுக்கு அரிசியும் தேங்காயும் அரைபட்டதும் அத்தோடு சர்க்கரையைப்போட்டு விட்டுவிட்டு அரைத்து எடுங்க.

நைசா அரைக்கவேண்டியதில்லை. ஓரளவு பரபரப்பா இருக்கலாம்.

உருண்டை பிடிச்சு குழந்தைகள் கையில கொடுத்தா, நிமிஷத்துல பறந்துடும்.

************************

பச்சைப் பட்டாணி மசாலா


பச்சைப் பட்டாணி... 
 
இது, வெஜிடபிள் பிரியாணி, மிக்ஸ் வெஜ் குருமா, பட்டாணி சுண்டல், புலாவ்ன்னு பலவகை உணவுப்பதார்த்தங்களில் நாம அடிக்கடி பயன்படுத்துகிற ஒன்று.

இந்தப் பச்சைப் பட்டாணியில், உடம்புக்குத்தேவையான  8 விட்டமின்கள்,
7  தாதுப்பொருட்கள், இன்னும் தேவையான அளவு நார்ச்சத்தும் இருக்கிறது. எலும்பு  வளர்ச்சிக்குத் தேவையான,மிக இன்றியமையாத விட்டமின் K இதில் இருப்பதால்  வளரும் குழந்தைகளுக்கு இது மிகவும் இன்றியமையாததென்பதால், அடிக்கடி பட்டாணியைப் பயன்படுத்துவது நல்லது.
 
பட்டாணி குருமாவுக்குத் தேவையான பொருட்கள்...


காய்ந்த பச்சைப் பட்டாணி 
அல்லது உரித்த பச்சைப் பட்டாணி - 1 கப்

பெரிய வெங்காயம் - 1

தக்காளி(பெரியது) - 1

பச்சைமிளகாய் -2

இஞ்சி - 1/2 அங்குலத் துண்டு

பூண்டு - 3 பல்

சோம்பு - 1/2 தேக்கரண்டி

வத்தல் தூள் - 1 தேக்கரண்டி

மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

கரம் மசாலாத்தூள் - 1/2 தேக்கரண்டி
நறுக்கிய கொத்துமல்லித்தழை - சிறிதளவு

பட்டை கிராம்பு -தாளிக்க 

உப்பு தேவையான அளவு

எண்ணெய் - அவரவர் தேவைக்கேற்ப 

பட்டாணியை முந்தின நாள் இரவே ஊறவிட்டு, பிரெஷர் குக்கரில் வேகவச்சு எடுத்துக்கணும்.

தேங்காயுடன்,சோம்பு,தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய்,இஞ்சி,பூண்டு எல்லாவற்றையும் சேர்த்து அரைச்சு வச்சுக்கணும்.

அடுப்பில் வாணலியை வைத்து சிறிய துண்டு பட்டை, இரண்டு கிராம்பு சேர்த்து வெடிக்கவிட்டு, அதில் அரைத்த மசாலாக் கலவையைக் கொட்டி வதக்கணும்.அதோட, வத்தல், மல்லி, மஞ்சள் தூளையெல்லாம் சேர்த்து வதக்கணும்.
கலவையிலிருந்து எண்ணெய் பிரிகிற சமயத்தில் பச்சைப் பட்டாணியைச் சேர்த்து, தேவையான உப்பும் அரை கப் தண்ணீரும் சேர்த்து மூடியிட்டு, குறைந்த தீயில் அஞ்சு நிமிஷம் வைக்கணும்.

கலவை நன்குகொதிச்சு வரும்போது,கரம்மசாலாவைச் சேர்த்துக் கிளறிவிட்டு, கடைசியா பொடியா நறுக்கிவச்ச கொத்துமல்லியைத் தூவி இறக்கணும். இது கூட்டுப்பதத்தில் இருக்கும். தோசை சப்பாத்தியோட சாப்பிட நன்றாக இருக்கும்.

இந்தக் குருமாவை இன்னும் கொஞ்சம் தண்ணீர் வற்றவிட்டு, கொஞ்சம் கெட்டியான பிறகு இறக்கினா ரசம் சாதத்துக்கு நல்ல காம்பினேஷன்.

பச்சைப்பட்டாணியை ஃப்ரெஷ்ஷா வாங்கி உரித்துச் செய்தால் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும்.