திண்ணை தமிழ் : November 2010

Thursday, November 18, 2010

கார்த்திகை ஓலைக்கொழுக்கட்டை


திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கே உரிய பலகாரங்களில் சிறப்பான ஒன்று இது. கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை தீபத்தன்று அநேகமாக எங்கள் வீடுகளில் இரண்டுவகைக் கொழுக்கட்டை செய்வோம். ஒன்று பிடிகொழுக்கட்டை, இன்னொன்று வேறெங்கும் கிடைக்கவே கிடைக்காத ஓலைக்கொழுக்கட்டை.

கார்த்திகையன்று கிடைக்குமோ கிடைக்காதோ என்று, முந்திய நாளே ஓலை வாங்கிவைத்துவிடுவோம். அதைச் சுத்தம்செய்து, அரையடி நீளத்துக்கு வெட்டி வைத்துக்கொள்வோம். அதில் தயாரித்த மாவை வைத்து பனையோலை நாரினால் கட்டி, இட்லிப் பாத்திரத்தில் வைத்து,வேகவைத்து எடுப்பார்கள். இந்தக் கொழுக்கட்டையின் மணம் மிகவும் அருமையாக இருக்கும்.

பனையோலைக் கொழுக்கட்டைக்குத் தேவையான பொருட்கள்...

பச்சரிசி மாவு - 3 கப்

சர்க்கரை அல்லது வெல்லத்தூள் - 1 கப்

தேங்காய்த் துருவல் - 1/2 கப்

வறுத்த பாசிப்பருப்பு - 2 மேசைக்கரண்டி

ஏலக்காய் பொடித்தது - 5

சுக்குப்பொடி - 1/2 தேக்கரண்டி

பச்சரிசி மாவில் சர்க்கரை, தேங்காய், பாசிப்பருப்பு, பொடித்துவைத்த ஏலம் சுக்கு எல்லாவற்றையும் கலந்து தேவையான நீர் சேர்த்து கெட்டியாகப் பிசைஞ்சுவச்சுக்கணும்.

பிசைந்த மாவில் ஒரு உருண்டை எடுத்து, அதை சுத்தம் செய்துவைத்த பனையோலையில் நீளமாகவைத்து,மூடி நாரினால் கட்டணும்.

இந்த ஓலைக் கொழுக்கட்டை மாவை இட்டிலிப் பாத்திரத்திற்குள் வைத்து பத்து நிமிஷம் வேகவிட்டு எடுக்கணும்.
அருமையான ஓலைக்கொழுக்கட்டை தயார்.

பனைவெல்லம் சேர்த்துச்செய்தால் மணம் இன்னும் தூக்கலாக இருக்கும்.

பி.கு :- ஊர்ல இருந்திருந்தால் பனையோலையும் கிடைத்திருக்கும், ஓலைக் கொழுக்கட்டையின் படமும் கிடைத்திருக்கும். பாலைவனத்திலிருப்பதால் இரண்டும் கிடைக்கவில்லை. ஒன்லி பனையோலையின் படம் மட்டும்தான் :)

Tuesday, November 16, 2010

பால் பழம்

இது வாழைப்பழமும் தேங்காய்ப் பாலும் சேர்த்துச் செய்யப்படும் ருசியான பானம். வயிற்றுப்புண், உடல் சூடு குறைய மிகவும் உதவக்கூடியது.

தேவையான பொருட்கள்

தேங்காய்ப்பால் - 2 கப்

பொடிசெய்த வெல்லம் - 1/4 கப்

வாழைப்பழம் - 1

ஏலக்காய் - 1

செய்முறை

பழத்தை மெல்லிய வில்லைகளாக நறுக்கிவச்சுக்கோங்க.

தேங்காய்ப் பாலுடன் வெல்லத்தைச் சேர்த்துக் கரைத்து வடிகட்டி வச்சுக்கோங்க.

உயரமான க்ளாஸில் தேங்காய்ப்பாலை ஊற்றி, அதில் பழத் துண்டுகளைப்போட்டு, ஸ்பூனுடன் பரிமாறுங்க.

குளிரவைத்துப் பரிமாறினால் மிகவும் அருமையாக இருக்கும்.

விருந்தினரோ, வீட்டு உறுப்பினர்களோ, நிச்சயம் அசந்துபோவாங்க இதன் சுவையில்.


பி.கு: ஏலக்காய்ப்பொடி கலந்துக்கலாம். ஆனா, தேங்காய்ப்பாலோட இயல்பான வாசனையை அது குறைத்துவிடும்.
Saturday, November 13, 2010

பக்ரீத் சமையல் - பிர்னி

போன ஈத் பெருநாளுக்கு தோழியின் வீட்டுக்குப் போயிருந்தோம். சும்மா சொல்லக்கூடாது, சூப்பர் சாப்பாடு. பிரியாணியும் பிர்னியும் இல்லாம எங்க வீடுகளில் விருந்தே கிடையாதுன்னு சொன்ன தோழியிடம், கேட்டு வாங்கிய சமையல் குறிப்பு இது. ரொம்ப சுலபமானதும்கூட. ஒருமுறை செய்துபார்த்தேன், சூப்பராக வந்தது. நீங்களும் உங்க வீட்டில் செய்து சாப்பிட்டுப் பாருங்க.

பிர்னிக்குத் தேவையான பொருட்கள்...

பாஸ்மதி அரிசி - 1/2 கப்

சர்க்கரை - 1 கப்

பால் - 1 லிட்டர்

பாதாம், பிஸ்தா - தலா 15 எண்ணிக்கை

ஏலக்காய் - 5

குங்குமப்பூ - சிறிதளவு

அரிசியை ஊறவைத்து, நைசா அரைச்சு வச்சுக்கோங்க.

பாதாம் பிஸ்தா பருப்புகளைத் தோல்நீக்கி, மெலிசா சீவி வச்சுக்கோங்க. ( இங்க அது ரெடிமேடாவே கிடைக்குது.)

அரைத்த அரிசியை, கால்லிட்டர் பாலில் கரைச்சு வச்சுக்கோங்க.

குங்குமப்பூவை ரெண்டு டேபிள்ஸ்பூன் பாலில் கரைச்சு வையுங்க.

ஏலக்காயையும் பொடியாக்கி வச்சுக்கோங்க.

அடி கனமான பாத்திரத்தில், முக்கால் லிட்டர் பாலை ஊற்றி கொதிக்கவையுங்க.

பால்கொதிக்கும்போது அரிசிமாவுக் கலவையை அதில் ஊற்றி, சிறுதீயில்வைத்து, கட்டிகள் இல்லாமல் கிண்டுங்க.

கெட்டியாகிவருகிற சமயத்தில் சர்க்கரையைச் சேர்த்து, இன்னும் இரண்டுமூன்று நிமிடங்கள் நன்றாகக் கிளறிவிட்டு, அதில் பாலில் கரைத்த குங்குமப்பூவையும், ஏலக்காய்ப் பொடியையும் சேருங்க.

நன்கு கெட்டியானதும் இறக்கி, ஆறவிட்டு, ஃபிரிட்ஜில் குளிரவிட்டு, துண்டுகளாக்கி ஜில்லுன்னு பரிமாறுங்க.

சூப்பரான பிர்னி தயார்.

குறிப்பு : இனிப்பு அதிகமாகத் தேவைப்பட்டால் இன்னும் ஒரு கால் கப் சர்க்கரைகூடச் சேர்த்துக்கொள்ளலாம்.

                                                                            **************

Thursday, November 11, 2010

முட்டை பொட்டுக்கடலை அடை


முட்டையில் உடம்புக்குத் தேவையான சத்துப்பொருட்கள் நிறைய இருப்பது எல்லாரும் அறிந்ததே. அத்துடன் இன்னும் கொஞ்சம் புரதச்சத்துக் கூடுதலான பொட்டுக்கடலையையும் சேர்த்துச்செய்யும் இந்த அடை, காலை உணவாகவோ,மாலை டிஃபனாகவோ, சாதத்துக்குப் பக்க உணவாகவோ உண்ணுவதற்கு ஏற்றது. முட்டை பிடிக்காதவர்களுக்குக்கூட, இந்த அடை ரொம்பப் பிடிக்கும்.

இதற்குத் தேவையான பொருட்கள்...

முட்டை - 1

நறுக்கிய வெங்காயம் - 1 மேஜைக்கரண்டி

பச்சைமிளகாய் (நறுக்கியது) - 1

பொட்டுக்கடலைப் பொடி - 2 மேஜைக்கரண்டி

மிளகுத்தூள் -  1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 5 அல்லது 6

உப்பு - தேவையான அளவு

வெங்காயம், பச்சைமிளகாய் கறிவேப்பிலையை நறுக்கி வச்சுக்கோங்க.

முட்டையை உப்பு, மிளகுத்தூளுடன் அடித்து, அதில் பொட்டுக்கடலைப் பொடியையும் சேருங்க.

நன்றாக அடித்துவைத்த முட்டைக் கலவையோடு, நறுக்கியவற்றைக் கலந்துக்கோங்க.

தோசைக்கல்லில் எண்ணெய்விட்டு அடையாகப் பொரித்து எடுங்க.

சுவையான முட்டை பொட்டுக்கடலை அடை தயார். இந்த மாதிரியே, நிறைய முட்டைகள் சேர்த்துச் செய்யும்போது, குழிப்பணியாரக்கல்லில் ஊற்றியும் பொரித்து எடுக்கலாம்.

Wednesday, November 10, 2010

கறிவேப்பிலைத் துவையல் (நீரிழிவுக்கு மருந்து)

சர்க்கரை வியாதிக்காக, தினமும், பாகற்காயைச் சாறெடுத்துக்குடிக்கிறேன். மாவிலை வேப்பிலையை அரைத்துக்குடிக்கிறேன் என்று வருத்தத்துடன் சொல்லிட்டிருக்கீங்களா? இதோ,உங்களுக்கான சுவையான வைத்தியம் ஒன்று...

காலையிலும் மாலையிலும் கைப்பிடியளவு கறிவேப்பிலையை மென்றுதின்று தண்ணீர் குடிச்சா நீரிழிவு நோய் கட்டுப்படுமென்று சொல்கிறார்கள். இதெல்லாம் தெரியாமலேயே, கறிவேப்பிலை தின்னா கருகருன்னு முடி வளரும்னு சொல்லி, எங்க கல்லூரி ஹாஸ்டல் பிள்ளைகள் கறிவேப்பிலை மரத்தை மொட்டையாக்கியதைக் கண்கூடாகப் பார்த்ததுண்டு.

கறிவேப்பிலை, உணவுக்கு மணமூட்டுவதோடு, இன்னும் பல வியாதிகளையும் தீர்க்கக்கூடியதுன்னு சொல்லுவாங்க. முக்கியமா நரையைத் தடுக்கும். வாயுத் தொந்தரவுகளைத் தீர்க்கும். சிலருக்கு, என்ன சாப்பிட்டாலும் நாக்குக்கு ருசியில்லாத மாதிரியே இருக்கும் அத்தகைய சுவையின்மைக் குறைப்பாட்டையும்கூடக் கறிவேப்பிலை தீர்த்துவைக்கும் என்கிறார்கள்.

வெறும் கறிவேப்பிலையை மென்று தின்னாமல், நீரிழிவைக் கட்டுப்படுத்தும் பருப்பு வகையான உளுத்தம்பருப்புடன் சேர்த்துச் சாப்பிட்டா இன்னமும் நல்லது.

கறிவேப்பிலைத் துவையலுக்குத் தேவையான பொருட்கள்...

சுத்தம் செய்த கறிவேப்பிலை- 1 கப்

தோலுள்ள உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

தேங்காய்த் துருவல் - 1/2 கப்

மிளகாய் வற்றல் - 6-8

புளி - சிறு பாக்கு அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை

வாணலியில், 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு, உளுத்தம்பருப்பையும் மிளகாய் வற்றலையும் வறுத்தெடுக்கவும். கடைசியில் அடுப்பை அணைக்குமுன் ஈரமில்லாத கறிவேப்பிலையை அதில்போட்டு லேசாகப் பிரட்டிவிட்டு அடுப்பை அணைக்கவும்.

ஆறியதும், வறுத்த பொருட்களுடன், தேங்காய்,புளி உப்புச் சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்தெடுக்கவும். மணமான கறிவேப்பிலைத் துவையல் தயார்.

Monday, November 8, 2010

எளியமுறை சிக்கன் குழம்புகாய்கறிகள் சேர்த்துச்செய்யும் மற்ற குழம்புகளைவிட, மிக எளிதாகச் செய்யக்கூடிய சிக்கன் குழம்பு இது.

தேவையான பொருட்கள்

சிக்கன் - 1/2 கிலோ

தக்காளி - 2

பெரிய வெங்காயம் -2

உருளைக்கிழங்கு - 1

தேங்காய்- 1/2 மூடி

முந்திரிப்பருப்பு - 5

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

தயிர் - 2 தேக்கரண்டி

வத்தல்தூள்-2 தேக்கரண்டி

மல்லித்தூள் -2 தேக்கரண்டி

மஞ்சள்தூள் -1/4 தேக்கரண்டி

கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி

தாளிக்க,

பட்டை - 1 அங்குலத்துண்டு,

கிராம்பு - 3

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை

தேங்காயுடன்,முந்திரிப்பருப்பு, தக்காளி வெங்காயம் இரண்டையும் சேர்த்து நன்றாக அரைச்சு வச்சுக்கோங்க.

உருளைக்கிழங்கை பெரிய துண்டுகளாக நறுக்கி வச்சுக்கோங்க.

வாணலியில் எண்ணெய்விட்டு, பட்டை, கிராம்பு போட்டுத் தாளித்து, அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்குங்க. வதங்கியதும் அதில் சுத்தம்செய்துவைத்த சிக்கனையும் தயிரையும் சேர்த்து, சிக்கன் நிறம்மாறும்வரை வதக்கிவிட்டு அடுப்பை அணைச்சுடுங்க.

பிரெஷர் குக்கரை அடுப்பில்வைத்து, வதக்கிய சிக்கன் கலவை, அரைத்த தேங்காய் விழுது, நறுக்கிய உருளைக்கிழங்கு,மசாலாப்பொடிகள் எல்லாவற்றையும் கலந்து, தேவையான உப்பும்போட்டு மூடி, ரெண்டு அல்லது மூணு விசில் விடுங்க.

பிரெஷர் நீங்கியதும் திறந்தால், அருமையான, மணமான
எண்ணெய் மிதக்கிற சிக்கன் கறி தயார்.சாதம்,சப்பாத்தி என எதனுடனும் சாப்பிடலாம்.

பி.கு: ******சிக்கனை  லேசாக, நிறம்மாறும்வரை தயிருடன் வதக்கினால்போதும்.*****

Wednesday, November 3, 2010

மைக்ரோவேவ் ரவா கேசரி (படங்களுடன்)

பண்டிகை சமையங்கள்ல நிறைய இனிப்புகள் செய்து அசத்துவோம். ஆனா, காலையில இட்லி தோசையோட எத்தனையோ ஸ்வீட் பரிமாறினாலும், அது கேசரிக்கு ஈடாகாது.

அந்தக் கேசரியை, வேர்க்காம விறுவிறுக்காம, கைவலிக்கக் கிளறாம, அதுவும் கொலஸ்ட்ரால்  அதிகமாயிடுமேன்னு டயட் பயம் இல்லாம, மூணே ஸ்பூன் நெய்யில செய்து பரிமாறினா சந்தோஷம் இன்னும் ஜாஸ்தியாகுமா இல்லையா? இதோ, எளிதாக மைக்ரோவேவ் ரவா கேசரி...


தேவையான பொருட்கள்

ரவை - 1 கப்

சர்க்கரை - 1 1/4 கப்

ஏலக்காய் - 4

முந்திரிப்பருப்பு - 15

கேசரி கலர் - சிட்டிகையளவு

நெய் - 3 தேக்கரண்டி

தண்ணீர் - 2 1/2 கப்

செய்முறை

இந்தக் கேசரியில நான் திராட்சை சேர்க்கல. விருப்பமிருந்தா திராட்சை சேர்த்துக்கலாம்.

முந்திரிப்பருப்பை ஒடிச்சு வச்சுக்கோங்க.

கேசரி கலரைத் தண்ணீரில் கலந்து, கொதிக்கிறதுக்குச் சற்றுமுன்பாக இறக்கிவையுங்க.

ஏலக்காய் பொடிபண்ணி வச்சுக்கோங்க.

மைக்ரோவேவ் பாத்திரத்தில், ரெண்டு ஸ்பூன் நெய் விட்டு, ரவையையும், ஒடிச்சு வச்சிருக்கிற முந்திரியையும் போட்டு, ஒரு ஸ்பூனால நல்லாக் கலந்துவிடுங்க.மைக்ரோவேவ் ஹை ல, ரெண்டு நிமிஷம் வச்சு எடுங்க. திரும்ப வெளியில எடுத்துக் கொஞ்சம் கிளறி விட்டு மறுபடி ஒரு நிமிஷம் வச்சு எடுத்துக்கோங்க. முந்திரி வறுபட்டுப் பொன்னிறமா மாறியிருக்கணும். அதுதான் பதம்.இப்ப வறுபட்ட ரவையில், கேசரி கலர் கலந்து சூடுபண்ணிவச்சிருக்கிற தண்ணீரை ஊற்றுங்க. கரண்டியால கட்டிகளில்லாம கலந்துவிடுங்க.


மறுபடியும் மைக்ரோ ஹை யில் 3 நிமிஷம். இப்போ, ரவை நன்றாக வெந்திருக்கும்.

வெந்த ரவை கலவையில், ஏலப்பொடியையும் சர்க்கரையையும் கொட்டி நன்றாகக் கிளறிவிடுங்க.


மறுபடியும் 2 நிமிஷம் மைக்ரோவேவில் வச்சு எடுத்து, ஒரு ஸ்பூன் நெய்யை மேலாக ஊற்றி, கேசரியை கரண்டியின் பின்பக்கத்தால் சமப்படுத்தி விட்டு, மறுபடியும் இரண்டு நிமிஷம் வச்சு எடுங்க. பத்தே நிமிஷத்தில், சிக்கனமான நெய்யில், சூப்பரான ரவா கேசரி தயார்.


அப்புறம் என்ன...இட்லி வடை, சட்னி சாம்பாரோட சாப்பிடவேண்டியதுதான் :)
                                                       ************************

Tuesday, November 2, 2010

கட்டிப்பருப்பும் வறுத்த ரசமும்!

வித்தியாசமா என்னென்னவோ விருந்தெல்லாம் சாப்பிட்டாலும், வீட்ல செய்துசாப்பிடுற இந்த ரசத்துக்கும் பருப்புக்கும் இருக்கிற மவுசு தனிதாங்க.சட்டுன்னு செய்யலாம்...ஜீரணமும் எளிதில் ஆகும். குழந்தைங்க பெரியவங்க எல்லாருக்கும் ஏற்றது. உடம்பு சரியில்லாதப்பகூட சாப்பிடக்கூடியதுன்னு இன்னும் சொல்லிட்டே போகலாம்.

வெறும் ரசத்துக்கும் பருப்புக்கும் இவ்வளவு பில்டப்பான்னு யோசிக்கிறீங்கல்ல :) இந்தக் கட்டிப்பருப்பும் கலர்ஃபுல் வறுத்த ரசமும் எங்க மாமியாரின் கைவண்ணம். நீங்களும் செய்துபாருங்க...

பருப்புக்கு...

துவரம் பருப்பு - 1 கப்

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 2

சின்ன வெங்காயம் - 3

பூண்டுப் பல் - 2

பெருங்காயம் - 1 சிட்டிகை

தாளிக்க...

கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை.

பருப்பைக் கழுவி, தக்காளி,வெங்காயம் பச்சை மிளகாய், பூண்டு,பெருங்காயம் சேர்த்து பிரெஷர் குக்கரில் வேகவிடுங்க.

 


வெந்த பருப்பை நல்லா மசிச்சுக்கோங்க.

வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி,கடுகு, உளுந்து,காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து,அதில் நன்றாக வெந்த பருப்பைக் கொட்டி, உப்புப்போட்டு ஒருநிமிடம் கொதிக்கவிட்டு இறக்கிடுங்க.

இனி, கலர்ஃபுல் வறுத்த ரசத்துக்கு...

எலுமிச்சையளவு புளியை ஊறவைத்து, அதிலிருந்து புளிக்கரைசலை வடிகட்டித் தனியே வச்சுக்கங்க.

ஒரு தக்காளியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அந்தப் புளித்தண்ணீரில் போட்டுக் கரைச்சு விடுங்க.

மிளகு, ஜீரகம், இரண்டு பல் பூண்டு,ஒரு இணுக்கு கறிவேப்பிலை, ஒரு மேஜைக்கரண்டி தேங்காய்த் துருவல் எல்லாவற்றையும் சேர்த்து மிக்சியில் ஒரு சுற்றுச் சுற்றி எடுத்துக்கங்க.

ஒரு கைப்பிடியளவு கொத்துமல்லி இலை நறுக்கி வச்சுக்கோங்க.

வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், கடுகு, பெருங்காயம் போட்டுத் தாளிச்சு, அதில் அரைத்துவைத்த பொருட்களைத் தட்டி, லேசா வறுத்துக்கோங்க.( தீயின் அளவைப்பொறுத்து, அரை நிமிஷத்திலிருந்து ஒரு நிமிஷம் போதும்)

வறுத்து வாசனை வரும்போது, புளி தக்காளிக் கலவையை அதில் ஊற்றி, தேவையான அளவு உப்புப்போடுங்க.உப்பு, புளிப்பு சரியா இருக்குதான்னு பார்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டுக்கோங்க.

ரசம் நுரைகூடி வரும்போது, கொத்துமல்லி இலைகளைத் தூவி இறக்கிடுங்க.

கமகமன்னு வறுத்த ரசம் ரெடி!

 


சுடச்சுட சாதம் வச்சு, பருப்பும் ரசமும் சேர்த்து சாப்பிடுங்க.இதுதான் சொர்க்கம்னு சொல்லுவீங்க :)

                                                            *******************