அடிசில்: கறிவேப்பிலைத் துவையல் (நீரிழிவுக்கு மருந்து)

Wednesday, November 10, 2010

கறிவேப்பிலைத் துவையல் (நீரிழிவுக்கு மருந்து)

சர்க்கரை வியாதிக்காக, தினமும், பாகற்காயைச் சாறெடுத்துக்குடிக்கிறேன். மாவிலை வேப்பிலையை அரைத்துக்குடிக்கிறேன் என்று வருத்தத்துடன் சொல்லிட்டிருக்கீங்களா? இதோ,உங்களுக்கான சுவையான வைத்தியம் ஒன்று...

காலையிலும் மாலையிலும் கைப்பிடியளவு கறிவேப்பிலையை மென்றுதின்று தண்ணீர் குடிச்சா நீரிழிவு நோய் கட்டுப்படுமென்று சொல்கிறார்கள். இதெல்லாம் தெரியாமலேயே, கறிவேப்பிலை தின்னா கருகருன்னு முடி வளரும்னு சொல்லி, எங்க கல்லூரி ஹாஸ்டல் பிள்ளைகள் கறிவேப்பிலை மரத்தை மொட்டையாக்கியதைக் கண்கூடாகப் பார்த்ததுண்டு.

கறிவேப்பிலை, உணவுக்கு மணமூட்டுவதோடு, இன்னும் பல வியாதிகளையும் தீர்க்கக்கூடியதுன்னு சொல்லுவாங்க. முக்கியமா நரையைத் தடுக்கும். வாயுத் தொந்தரவுகளைத் தீர்க்கும். சிலருக்கு, என்ன சாப்பிட்டாலும் நாக்குக்கு ருசியில்லாத மாதிரியே இருக்கும் அத்தகைய சுவையின்மைக் குறைப்பாட்டையும்கூடக் கறிவேப்பிலை தீர்த்துவைக்கும் என்கிறார்கள்.

வெறும் கறிவேப்பிலையை மென்று தின்னாமல், நீரிழிவைக் கட்டுப்படுத்தும் பருப்பு வகையான உளுத்தம்பருப்புடன் சேர்த்துச் சாப்பிட்டா இன்னமும் நல்லதுதானே?

இதோ,கறிவேப்பிலைத் துவையலுக்குத் தேவையான பொருட்கள்...

சுத்தம் செய்த கறிவேப்பிலை- 1 கப்

தோலுள்ள உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

தேங்காய்த் துருவல் - 1/2 கப்

மிளகாய் வற்றல் - 6-8

புளி - சிறு பாக்களவு

உப்பு - தேவையான அளவு

வாணலியில், 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு, உளுத்தம்பருப்பையும் மிளகாய் வற்றலையும் வறுத்தெடுக்கவும். கடைசியில் அடுப்பை அணைக்குமுன் ஈரமில்லாத கறிவேப்பிலையை அதில்போட்டு லேசாகப் பிரட்டிவிட்டு அடுப்பை அணைக்கவும்.

ஆறியதும், வறுத்த பொருட்களுடன், தேங்காய்,புளி உப்புச் சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்தெடுக்கவும். மணமான கறிவேப்பிலைத் துவையல் தயார்.

No comments:

Post a Comment

அடிசில் சுவைக்கவந்த அனைவருக்கும் என் அன்பான வரவேற்புகள்!!!