திண்ணை தமிழ் : August 2012

Sunday, August 12, 2012

முட்டை பிரியாணி (Egg Biryani)இதுவரை எத்தனையோ இடங்களில் சாப்பிட்டிருந்தாலும்  இடத்துக்கு இடம் வித்தியாசமானதாய்த் தெரியும் இந்த பிரியாணி. ஆனால், அநேகமாக, எல்லா இடத்திலும் அதிக மசாலா இல்லாமலும், எண்ணெய் கூடுதலாகவும்தான் இருக்கும்.

இந்த முட்டை பிரியாணி, மசாலா கூடுதலாக, ஆனால், எளிதாகச் செய்யக்கூடியது.  வேகவைத்த முட்டையையும் அரிசி, மசாலாவுடன் கலந்துவிடுவதால் முட்டையிலும் மசாலா நன்கு கலந்திருக்கும்.

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி - 2 கப்
முட்டை               - 5
வெங்காயம்        - 2
தக்காளி                - 3
பச்சைமிளகாய் - 4
மஞ்சள்தூள்        - 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள்  - 1 தேக்கரண்டி
கரம்மசாலா       - 1/2 தேக்கரண்டி
பட்டை, கிராம்பு,
ஏலம், பிரியாணி இலை- தாளிக்க
புதினா,
கொத்துமல்லி   - கைப்பிடியளவு
எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை

பாஸ்மதி அரிசியைக் கழுவி, அரைமணி நேரம் ஊறவிடவும்.

முட்டையைக் கெட்டியாக வேகவைத்து உரித்துவைக்கவும்.


குக்கர் பாத்திரத்தில் எண்ணெய்விட்டு, மெலிதாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். வெங்காயம் வறுபட்டதும் அதனுடன்  பட்டை, ஏலம், கிராம்பு, பிரியாணி இலை போட்டு வறுக்கவும்.அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், தக்காளி, பாதியளவு மல்லி புதினா இலைகளைச்சேர்த்து வதக்கவும். அதில் பொடிவகைகளையும், தேவையான உப்பையும் சேர்த்து வதக்கி, எண்ணெய் பிரிகிற சமயத்தில், வேகவைத்த முட்டையில், நீளவாக்கில் கத்தியால்கீறி அதையும் மசாலாவுடன் சேர்த்து உடைந்துவிடாமல் பிரட்டிவிடவும்.

ஊறவைத்த அரிசியையும் வடிகட்டி மசாலாக்கலவையுடன் சேர்க்கவும். சிலநிமிடங்கள் வதக்கவும். வறுத்துவைத்த வெங்காயத்தையும் மீதமுள்ள மல்லி புதினாவையும்ஒன்றுக்கு ஒன்றரை என்ற விகிதத்தில் தண்ணீரையும் சேர்த்து, உப்பு, காரம் சரிபார்த்து, அதில் ஒரு எலுமிச்சம்பழத்தைப் பிழிந்துவிடவும். குக்கரை மூடி சிறுதீயில் 15 நிமிடங்கள் வைத்து இறக்கவும். விசில் வரவேண்டுமென்று எதிர்பார்க்கவேண்டாம்.

சுவையான, காரசாரமான முட்டை பிரியாணி தயார். வெங்காயம் அல்லது வெள்ளரிக்காய் தயிர்ப்பச்சடியுடன் பரிமாறவும்.


Saturday, August 11, 2012

உளுத்தங் கஞ்சி
உடல் ஆரோக்கியத்துக்கு உளுந்து மிகவும் நல்லதுன்னு சொல்லுவாங்க நம்ம பெரியவங்க. வாத சம்பந்தமான நோய்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும், கூட மிக நல்லது உளுந்து. எளிதாகச் செய்யப்படும் இந்த உளுத்தங் கஞ்சி மிகவும் மணமானதும் சுவையானதும் கூட. பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் காலை உணவாகக் கொடுக்கக்கூடிய சத்தான உணவு இது.

உளுந்து உடலுக்கு பலமும் நலமும் தரக்கூடிய ஒரு உணவுப் பொருள். இது, பித்தத்தையும் உடல் சூட்டையும் குறைத்து எலும்புகளுக்கும் நரம்புகளுக்கும் வலிமையளிக்கக் கூடியது  என்பது அகத்தியரின் அறிவுரை.

தேவையான பொருட்கள்

தோலில்லாத வெள்ளை உளுந்து - 100 கிராம்

பச்சரிசி - 50 கிராம்

பால் -1/2 லிட்டர்

சர்க்கரை - தேவைக்கேற்ப

உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:-

உளுந்தம்பருப்பையும், பச்சரிசியையும் நீரில் கழுவி, குக்கரில் வைத்து நன்றாகக் குழைய வேகவைத்துக்கொள்ளவும். குக்கரைத் திறந்தபின் வெந்த பருப்பையும் அரிசியையும் கரண்டியால் நன்கு மசித்துவிட்டு, பாலை அதில் சேர்க்கவும். தேவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து சிட்டிகை உப்பும் சேர்த்துக் கலந்துவிடவும். சுவையான உளுத்தங் கஞ்சி தயார்.

தேவையானா, ஏலக்காய்ப்பொடி சேர்க்கலாம். ஆனா, அப்படிச் சேர்க்கும்போது உளுந்தோட இயல்பான வாசனை இல்லாம போயிடும். உளுத்தம்பருப்புக்குப் பதிலாக பாசிப்பருப்பு சேர்த்தும் இதுபோலக் கஞ்சி செய்யலாம்.

முழு வீடியோ செய்முறை இங்கே...

https://youtu.be/8sDyuHYWuhE


Sunday, August 5, 2012

காய்கறி மசாலா சப்பாத்தி

சட்டுன்னு ஏதாவது சமைக்கணும். ஆனா சத்தானதாவும் இருக்கணும். என்னசெய்யலாம் என்று யோசிக்கிறவர்களுக்கு, எளிதான சமையல் குறிப்பு இது.தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - 2 கோப்பை
முட்டைக்கோஸ் - 200 கிராம்
கேரட் - 1
பெரிய வெங்காயம் - 1
கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா- 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு.

செய்முறை

வெங்காயம், முட்டைக்கோஸ், கேரட்டைத் பொடியாக நறுக்கி/துருவிக்கொள்ளவும். கறிவேப்பிலையையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

 வாணலியில் எண்ணெய் விட்டு, சீரகத்தைத் தாளித்து, அதன்பின், துருவிய காய்கறிகளையும் நறுக்கிய கறிவேப்பிலையையும் போட்டு, பச்சை வாசனைபோக வதக்கவும்.

கோதுமை மாவுடன், வதக்கிய காய்கறிக்கலவை, மாசாலாப்பொடிகள், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்துக்குத் திரட்டிக்கொள்ளவும். சிறிதளவு எண்ணெய் விட்டு சப்பாத்திகளாகச் சுட்டெடுக்கவும்.

இந்தச் சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள எதுவும் தேவைப்படாது. காய்கறி சாப்பிடாத குழந்தைகள்கூடக் கடகடவென்று சாப்பிட்டுவிடுவார்கள். முக்கியமாக முட்டைக்கோஸ் வாசனை கொஞ்சம்கூடத் தெரியாது.

குறிப்பு: அவசியமென்றால், தயிரில் சீரகம், மிளகு பொடித்துப்போட்டு உப்பு சேர்த்துத் தொட்டுக்கொள்ளலாம்.