அடிசில்: 2017

Sunday, December 3, 2017

கறிக் குழம்பு (மட்டன் குழம்பு)



கறிக்குழம்பு என்று எழுத ஆரம்பித்ததுமே நினைவுகள் முப்பது வருடங்கள் பின்னோக்கிப் பறக்க ஆரம்பித்துவிட்டன, அப்போதெல்லாம் ஞாயிற்றுக்கிழமையென்றால் யாரிடமும் இன்றைக்கு என்ன சமையல் என்று கேட்கவேண்டியிருக்காது, அநேகமாக எல்லார் வீட்டிலும் கறிக்குழம்பாகத்தான் இருக்கும். அதன் துணை சமாச்சாரங்கள் வீட்டுக்கு வீடு வித்தியாசப்பட்டாலும் அசைவம் சாப்பிடுகிற வீடுகளில் ஆட்டுக்கறிதான் அடுப்புகளில் மணம்பரப்பிக்கொண்டிருக்கும். கறிக்குழம்பு எப்படி கட்டாயம் இருக்குமோ அதேபோல எங்கள் வீட்டில் அன்றைக்கு மாலையில் இஞ்சிச்சாறும் கட்டாயம் உண்டு.  இஞ்சியும் பூண்டும் சேர்த்து இடித்தெடுத்து வென்னீரில் கொதிக்கவைத்து ஆளுக்கு அரை தம்ளர் தயாராக இருக்கும். அப்படி இப்படியென்று சிறிது நேரம் போக்குக்காட்டினாலும், இஞ்சிச்சாறு குடித்தால்தான் இரவுச் சாப்பாடு. ஆக, ஞாயிறு என்றாலே கறிக்குழம்பு வாசனையும் இஞ்சியின் காரமும் இன்றைக்கும் நினைவுவரத்தான் செய்கிறது.

கறிக்குழம்பு செய்முறை:

தேவையான பொருட்கள்:

  • ஆட்டுக்கறி - 1/2 கிலோ
  • சின்ன வெங்காயம் அல்லது பல்லாரி வெங்காயம் - 200 கிராம்
  • தக்காளி - 2
  • தயிர் - 1/2 கப்
  • இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
  • பூண்டு - 8 பல்
  • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  • வத்தல் பொடி - 1/1/2 தேக்கரண்டி 
  • மல்லிப்பொடி - 4 தேக்கரண்டி
  • கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
  • உப்பு - தேவைக்கேற்ப


தாளிக்க:

  • நல்லெண்ணெய் - 2 மேஜைக் கரண்டி
  • பட்டை - 1 அங்குலத் துண்டு
  • கிராம்பு - 4
  • ஏலக்காய் - 3
  • கறிவேப்பிலை - தேவைக்கேற்ப


அரைக்க:

  • தேங்காய் (துருவியது) - 1/2 கப்
  • சீரகம் - 1/2 தேக்கரண்டி
  • முந்திரி அல்லது பாதாம் - 5 பருப்புகள்


செய்முறை

கறியை நன்றாகக் கழுவிவைக்கவும். 

வெங்காயம் தக்காளியை நறுக்கி வைக்கவும்

இஞ்சியையும் பூண்டையும் சேர்த்து அரைத்து வைக்கவும்,

தேங்காயை சீரகம் மற்றும் முந்திரியுடன் சேர்த்து நன்றாக அரைத்துவைக்கவும்

வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருடகளைச் சேர்த்துப் பொரியவிடவும்., அதில் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும்.

சிறிது வதங்கியதும் அதில் கழுவி வைத்த கறியையும் சேர்த்து வதக்கவும்.

இரண்டு மூன்று நிமிடங்களில் கறி சற்று நிறம் மாறிவரும். அப்போது தயிரைச் சேர்த்து நன்றாகப் பிரட்டிவிடவும். சில நிமிடங்கள் கழிந்ததும் மஞ்சள் தூள் மற்றும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்துக் கலந்து விடவும்.

குக்கரை மூடி, மூன்று விசில் வரும்வரை வேகவிடவும்.

ஆவி இறங்கியபின், குக்கரைத் திறந்து வெந்த கறியுடன் மசாலாப் பொடிகள், அரைத்த தேங்காய்,  தக்காளி, விருப்பப்பட்டால் ஒரு உருளைக் கிழங்கையும் சேர்த்து, தேவையான நீர் சேர்த்துக் கலந்துவிடவும். தேவையான உப்பு சேர்க்கவும்.

குக்கரை மூடி மறுபடியும் குறைவான தீயில் வைத்து ஒன்று அல்லது இரண்டு விசில் வைத்து இறக்கவும். சுவையான கறிக் குழம்பு தயார். 

இது சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை, இடியாப்பம் என அனைத்துக்கும்  சேர்த்துச் சாப்பிட ஏற்ற குழம்பு.

Recipe in Engish

Thursday, November 30, 2017

திருநெல்வேலி பருப்புக் குழம்பு




இந்தத் திருநெல்வேலி பருப்புக் குழம்பு தமிழகத்தின் மற்ற பகுதிகளில் செய்யப்படும் பருப்புக் குழம்பைவிடக் கொஞ்சம் வித்தியாசமானது. வத்தல் மற்றும் மசாலாப் பொடிகளைச் சேர்க்காமல் பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், மற்றும் பூண்டு சேர்த்து வேகவைத்துக் கடைந்து தயாரிக்கப்படுவது. குறைவான அளவு துவரம்பருப்புடன் கொஞ்சம் நீர்க்கச் செய்யப்படும் இந்தக் குழம்பு காரமான காய்கறிப் பொரியல்கள் மற்றும் பொரித்த முட்டையுடன் சேர்த்துச் சாப்பிட ஏற்றது. 

தேவையான பொருட்கள் 


துவரம் பருப்பு - 1/2 கப்
பச்சை மிளகாய் - 5
தக்காளி - 1
சிறிய வெங்காயம் - 3
பூண்டு - 3 பல்
மஞ்சள் பொடி 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
புளி -சிறிய எலுமிச்சை அளவு

தாளிக்க

எண்ணெய் - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 இணுக்கு

அரைக்க

துருவிய தேங்காய் - 1/2 கப்
சீரகம் - 1 தேக்கரண்டி

செய்முறை

* பருப்புடன் மஞ்சள் பொடி, பெருங்காயம், தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய், கத்தரிக்காய் மற்றும் பூண்டு சேர்த்து வேக வைத்து மசித்துக்கொள்ளவும்.

* புளியைக் கரைத்து வடிகட்டி வைக்கவும்

* தேங்காயுடன் சீரகம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

* பருப்புக் கலவையுடன் அரைத்த தேங்காய் மற்றும் புளிக் கரைசலைச் சேர்த்து நீர்க்கக் கலந்துகொள்ளவும். உப்பு சேர்த்து சரிபார்த்துக்கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துப் பொரிய விடவும். கடுகு வெடித்தபின், குழம்புக் கலவையைச் சேர்க்கவும்.

* குழம்பு நுரைகூடி வரும்போது நறுக்கிய கொத்துமல்லி இலைகளைச் சேர்த்து இறக்கவும். இந்தக் குழம்பைக் கொதிக்க விட்டால் சுவை மாறிப்போகும்.

* சூடான சாதத்துடன் சிறிது நெய்யும் சேர்த்துச் சாப்பிட, சுவை மிக நன்றாக இருக்கும்.

Saturday, January 21, 2017

மைசூர்ப்பருப்பு கீரை சாம்பார்



மைசூர்ப்பருப்பு கீரை சாம்பார்

கீரை வாங்கிவந்து, பொறுமையாக ஆய்ந்து சுத்தம் செய்து அதைப் பொரியலாகவோ, மசியலாகவோ செய்துவைத்தால் முகத்தைச் சுளித்துக்கொண்டு எனக்குப் பிடிக்கல...வேண்டாமென்று மிகச் சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள் சின்னக் குழந்தைகள். ஆடுமாடுகளுக்குப் போடவேண்டியதையெல்லாம் அடிக்கடி வாங்கிட்டு வந்து தொல்லை பண்ணாதே அம்மா என்பார்கள் கொஞ்சம் வளர்ந்த குழந்தைகள். அவர்கள் அத்தனை பேரையும் சத்தமில்லாமல் சாப்பிடவைக்கும் இந்தக் கீரை சாம்பார்.

தேவையான பொருட்கள்

முளைக்கீரை அல்லது பாலக் கீரை நறுக்கியது – 1 சுப்
மைசூர்ப் பருப்பு (மசூர் தால்) – 1 கப்
வெங்காயம் – 1
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
பூண்டு – 3 பல்
மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
சாம்பார்ப் பொடி – ½ தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

தாளிக்க
கடுகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 1
பெருங்காயம் – சிறிதளவு
கறிவேப்பிலை – ஒரு இணுக்கு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

பருப்பைக் கழுவி வைத்துக்கொள்ளவும்.
கீரையைச் சுத்தம்செய்து நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.
பச்சை மிளகாயைக் கீறிவைக்கவும்.
காய்கறிகளையும் சிறியதாக நறுக்கிக்கொள்ளவும்
பருப்புடன் காய்கறிகள் மற்றும் நறுக்கிய கீரையையும் சேர்த்து பிரஷர் குக்கரில் வேக வைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் சூடானதும் தாளிக்கக் கொடுத்திருக்கும் பொருட்களைச் சேர்த்துத் தாளித்த பின், வேகவைத்த பருப்பு, கீரை, காய்கறிக் கலவையை அதில் சேர்க்கவும்.

சாம்பாருக்குத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்தபின், அதில் மஞ்சள், மிளகாய்ப் பொடியையும் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

ஐந்து நிமிடங்கள் கொதித்த பிறகு சாம்பார்ப் பொடியையும் சேர்த்து. மேலும் இரண்டு மூன்று நிமிடங்கள் கொதிக்கவிட்டு, கொத்துமல்லி இலையைத் தூவி இறக்கவும்.


இந்த சாம்பாரை, இட்லி, தோசை, உப்புமா, பொங்கல் மற்றும் அரிசிச் சோற்றுடனும் சாப்பிடலாம். பிரஷர் குக்கரில் வேகவைப்பதால் கீரை நன்றாக வெந்து பருப்புடன் சேர்ந்துவிடும். அதனால், சாம்பாரில் கீரை சேர்த்திருக்கிறேன் என்று நீங்கள் சொன்னால்தான் குழந்தைகளுக்குத் தெரியும்.