திண்ணை தமிழ் : January 2017

Saturday, January 21, 2017

மைசூர்ப்பருப்பு கீரை சாம்பார்மைசூர்ப்பருப்பு கீரை சாம்பார்

கீரை வாங்கிவந்து, பொறுமையாக ஆய்ந்து சுத்தம் செய்து அதைப் பொரியலாகவோ, மசியலாகவோ செய்துவைத்தால் முகத்தைச் சுளித்துக்கொண்டு எனக்குப் பிடிக்கல...வேண்டாமென்று மிகச் சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள் சின்னக் குழந்தைகள். ஆடுமாடுகளுக்குப் போடவேண்டியதையெல்லாம் அடிக்கடி வாங்கிட்டு வந்து தொல்லை பண்ணாதே அம்மா என்பார்கள் கொஞ்சம் வளர்ந்த குழந்தைகள். அவர்கள் அத்தனை பேரையும் சத்தமில்லாமல் சாப்பிடவைக்கும் இந்தக் கீரை சாம்பார்.

தேவையான பொருட்கள்

முளைக்கீரை அல்லது பாலக் கீரை நறுக்கியது – 1 சுப்
மைசூர்ப் பருப்பு (மசூர் தால்) – 1 கப்
வெங்காயம் – 1
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
பூண்டு – 3 பல்
மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
சாம்பார்ப் பொடி – ½ தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

தாளிக்க
கடுகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 1
பெருங்காயம் – சிறிதளவு
கறிவேப்பிலை – ஒரு இணுக்கு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

பருப்பைக் கழுவி வைத்துக்கொள்ளவும்.
கீரையைச் சுத்தம்செய்து நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.
பச்சை மிளகாயைக் கீறிவைக்கவும்.
காய்கறிகளையும் சிறியதாக நறுக்கிக்கொள்ளவும்
பருப்புடன் காய்கறிகள் மற்றும் நறுக்கிய கீரையையும் சேர்த்து பிரஷர் குக்கரில் வேக வைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் சூடானதும் தாளிக்கக் கொடுத்திருக்கும் பொருட்களைச் சேர்த்துத் தாளித்த பின், வேகவைத்த பருப்பு, கீரை, காய்கறிக் கலவையை அதில் சேர்க்கவும்.

சாம்பாருக்குத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்தபின், அதில் மஞ்சள், மிளகாய்ப் பொடியையும் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

ஐந்து நிமிடங்கள் கொதித்த பிறகு சாம்பார்ப் பொடியையும் சேர்த்து. மேலும் இரண்டு மூன்று நிமிடங்கள் கொதிக்கவிட்டு, கொத்துமல்லி இலையைத் தூவி இறக்கவும்.


இந்த சாம்பாரை, இட்லி, தோசை, உப்புமா, பொங்கல் மற்றும் அரிசிச் சோற்றுடனும் சாப்பிடலாம். பிரஷர் குக்கரில் வேகவைப்பதால் கீரை நன்றாக வெந்து பருப்புடன் சேர்ந்துவிடும். அதனால், சாம்பாரில் கீரை சேர்த்திருக்கிறேன் என்று நீங்கள் சொன்னால்தான் குழந்தைகளுக்குத் தெரியும்.