திண்ணை தமிழ் : November 2017

Thursday, November 30, 2017

திருநெல்வேலி பருப்புக் குழம்பு
இந்தத் திருநெல்வேலி பருப்புக் குழம்பு தமிழகத்தின் மற்ற பகுதிகளில் செய்யப்படும் பருப்புக் குழம்பைவிடக் கொஞ்சம் வித்தியாசமானது. வத்தல் மற்றும் மசாலாப் பொடிகளைச் சேர்க்காமல் பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், மற்றும் பூண்டு சேர்த்து வேகவைத்துக் கடைந்து தயாரிக்கப்படுவது. குறைவான அளவு துவரம்பருப்புடன் கொஞ்சம் நீர்க்கச் செய்யப்படும் இந்தக் குழம்பு காரமான காய்கறிப் பொரியல்கள் மற்றும் பொரித்த முட்டையுடன் சேர்த்துச் சாப்பிட ஏற்றது. 

தேவையான பொருட்கள் 


துவரம் பருப்பு - 1/2 கப்
பச்சை மிளகாய் - 5
தக்காளி - 1
சிறிய வெங்காயம் - 3
பூண்டு - 3 பல்
மஞ்சள் பொடி 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
புளி -சிறிய எலுமிச்சை அளவு

தாளிக்க

எண்ணெய் - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 இணுக்கு

அரைக்க

துருவிய தேங்காய் - 1/2 கப்
சீரகம் - 1 தேக்கரண்டி

செய்முறை

* பருப்புடன் மஞ்சள் பொடி, பெருங்காயம், தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய், கத்தரிக்காய் மற்றும் பூண்டு சேர்த்து வேக வைத்து மசித்துக்கொள்ளவும்.

* புளியைக் கரைத்து வடிகட்டி வைக்கவும்

* தேங்காயுடன் சீரகம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

* பருப்புக் கலவையுடன் அரைத்த தேங்காய் மற்றும் புளிக் கரைசலைச் சேர்த்து நீர்க்கக் கலந்துகொள்ளவும். உப்பு சேர்த்து சரிபார்த்துக்கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துப் பொரிய விடவும். கடுகு வெடித்தபின், குழம்புக் கலவையைச் சேர்க்கவும்.

* குழம்பு நுரைகூடி வரும்போது நறுக்கிய கொத்துமல்லி இலைகளைச் சேர்த்து இறக்கவும். இந்தக் குழம்பைக் கொதிக்க விட்டால் சுவை மாறிப்போகும்.

* சூடான சாதத்துடன் சிறிது நெய்யும் சேர்த்துச் சாப்பிட, சுவை மிக நன்றாக இருக்கும்.