அடிசில்: 2018

Sunday, October 21, 2018

சுலபமான உருளைக்கிழங்கு பொரியல் | Simple Potato fry


via IFTTT

Wednesday, May 9, 2018

செட்டிநாடு மீன் குழம்பு

செட்டிநாடு மீன் குழம்பு, இது காரசாரமான, தனித்துவமான சுவையுள்ள மீன் குழம்பு ஆகும். அரைத்துச் சேர்க்கப்படும் மசாலாக் கலவை இந்தக் குழம்புக்குக் கூடுதல் சுவையை அளிக்கிறது.
வீடியோ செய்முறை இங்கே...தேவையான பொருட்கள்

மீன் - 300 கிராம்
சின்ன வெங்காயம் - 5
பூண்டு - 4 பல்
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
வத்தல் தூள் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
நல்லெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி

அரைக்க

பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
கறிவேப்பிலை - 3 இணுக்கு
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி


தாளிக்க

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 இணுக்கு
பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை

அரைக்க வேண்டிய பொருட்களை ஒன்றாகச் சேர்த்து நன்றாக அரைத்தெடுத்துக்கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை உரித்து, நறுக்கிவைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, வெந்தயம், கடுகு சேர்த்துத் தாளிக்கவும். 

கடுகு வெடித்ததும், பெருங்காயம் சேர்த்துத் தாளிக்கவும்.

அத்துடன் நறுக்கிய சின்ன வெங்காயம். பச்சை மிளகாய், கறிவேப்பிலை, நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.

அத்துடன், அரைத்த மசாலாக் கலவையைச் சேர்த்து, பச்சை வாசனை போகுமளவுக்கு வதக்கிக் கொள்ளவும்.

அத்துடன், மஞ்சள், வத்தல், மல்லித்தூள்களையும் சேர்த்து வதக்கவும்.

மசாலா வாடை மாறியதும், புளிக்கரைசலைச் சேர்த்து, மூடியிட்டு 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

கொதித்துக்கொண்டிருக்கிற குழம்புக் கலவையில், மீன் துண்டுகளைச் சேர்க்கவும். 

மீன் துண்டுகளைச் சேர்த்தபின் பத்து நிமிடங்கள் சிறுதீயில், சிறிதளவு இடைவெளியுடன் மூடிக் கொதிக்கவிடவும்.

மீன் வெந்து எண்ணெய் பிரியவும் குழம்பை இறக்கிப் பரிமாறவும்.Thursday, April 19, 2018

கடலைப்பருப்புப் பாயசம்


தமிழர் சமையலில் பருப்பு வகைகள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. குழம்பாகவும் கூட்டாகவும், பலவிதப் பலகாரங்களாகவும் அவை அன்றாட சமையலில் பங்கெடுத்துக்கொள்கின்றன. இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் கடலைப்பருப்புப் பாயசம், தமிழகத்தில் மட்டுமன்றி, கேரளத்திலும் மிகப் பிரபலமான ஒன்று.

இதற்குத் தேவையான பொருட்கள்கடலைப்பருப்பு - 1/2 கப்

ஜவ்வரிசி - 2 டேபிள்ஸ்பூன்

தேங்காய்ப்பால் - 1 கப்

நறுக்கிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்

வெல்லம் - 150 கிராம்

ஏலக்காய் - 3

முந்திரி - 15

திராட்சை - 15

நெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

கடலைப்பருப்பை குக்கரில் வைத்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

ஜவ்வரிசியையும் தண்ணீரில் 1/2 தேக்கரண்டி நெய் விட்டு வேகவைத்துக்கொள்ளவும்.

ஒரு கப் தேங்காய்ப்பால் தயாரித்துத் தயாராக வைக்கவும்.

சிறிதளவு தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிவைக்கவும்.

வெல்லத்தைச் சிறிதளவு தண்ணீரில் கரையவிட்டு வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.

ஏலக்காயைப் பொடிசெய்துவைக்கவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் வேகவைத்த கடலைப்பருப்பு, ஜவ்வரிசி இரண்டையும் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.

அத்துடன், வெல்லக்கரைசல் சேர்த்துச் சூடேற்றவும்.

கலவை நன்கு கொதித்தபின், அதனுடன் தேங்காய்ப்பாலைக் கலந்துவிடவும். தூளாக்கிய ஏலக்காயையும் சேர்க்கவும்.

வாணலியில் நெய்விட்டு, முந்திரி திராட்சை மற்றும் தேங்காய்த் துண்டுகளை வறுக்கவும்.

பாயசம் தேங்காய்ப்பால் சேர்த்தபின் அதிகம் கொதிக்கவிடாமல், முந்திரி திராட்சை மற்றும் தேங்காயைத் தூவி இறக்கவும்.

வறுத்த தேங்காய்த் துண்டுகள் இந்தப் பாயசத்துக்குக் கூடுதல் சுவையைக் கொடுக்கும்.

சுவையான கடலைப்பருப்புப் பாயசம் தயார்.


பச்சைப்பயறு அடை

பச்சைப்பயறு அல்லது பாசிப்பயறு என்று அழைக்கப்படும் இந்தப் பயறு ஆங்கிலத்தில் கிரீன் கிராம்( green gram) என்று அழைக்கப்படுகிறது. பொதுவாகவே பயறுவகைகளில் புரோட்டீன் எனும் புரதச் சத்து மிக அதிகம். இந்தப் பச்சைப்பயறு, புரோட்டீன்கள், விட்டமின்கள், தாதுச்சத்துக்கள் மற்றும் இரும்புச்சத்தும் அதிகம் உடையது என்பதால் அனைத்து வயதினருக்கும் ஏற்றது என்றாலும் குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. 
இந்தப் பச்சைப்பயறு அடைக்குத் தேவையான பொருட்கள்

பச்சைப்பயறு - 1கப்

புழுங்கல் அரிசி - 2 டேபிள்ஸ்பூன்

இஞ்சி - 1 அங்குலத் துண்டு

பச்சை மிளகாய் - 2 அல்லது 3

கறிவேப்பிலை - 2 இணுக்கு

சீரகம் - 1 தேக்கரண்டி

வெங்காயம் - 1

துருவிய தேங்காய் - 1/2 கப்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை

பச்சைப்பயறையும் அரிசியையும் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்கவும்.

ஊறிய பயறு அரிசிக்கலவையுடன் பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், கறிவேப்பிலை சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.

அரைத்த மாவுடன் துருவிய தேங்காய் , நறுக்கிய வெங்காயம் சேர்த்துக் கலக்கவும். வெங்காயத்தைச் சிறிது எண்ணெயில் வதக்கியும் சேர்க்கலாம்.

தேவையான உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்துக்குக் கலந்துகொள்ளவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, எண்ணெய் தடவி, ஒரு கரண்டி மாவை விட்டு நன்றாகப் பரப்பிவிடவும். அடையைச் சுற்றிலும் அடையின் மேலும் பரவலாக நல்லெண்ணெய் விட்டுத் திருப்பி, மறுபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

சுவையான பச்சைப்பயறு அடை தயார். இதனைச் சட்னி அல்லது தூளாக்கிய வெல்லத்துடன் சாப்பிடலாம்.

Sunday, March 25, 2018

தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்
முழுமையான வீடியோ செய்முறை இங்கே...
கடற்கரை, திருவிழாக்கூட்டங்களில் நாம் வாங்கி ரசித்துச் சாப்பிட்ட தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டலை வீட்டில் எப்படிச் செய்யலாம்னு இப்போ நாம் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

வெள்ளைப் பட்டாணி - 1 கப் 
எலுமிச்சை - 1/2 மூடி
மாங்காய் - 1/2 கப் சீவியது

அரைக்க

தேங்காய் - 1துண்டு
இஞ்சி - 1 அங்குலத் துண்டு
காய்ந்த மிளகாய் - 2

தாளிக்க

கடுகு -1/2 தேக்கரண்டி
உளுந்து - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
கறிவேப்பிலை - 10
எண்ணெய் - தேவைக்கு

செய்முறை

பட்டாணியை ஆறிலிருந்து எட்டுமணி நேரம் ஊறவைத்து, உப்புப் போட்டு வேகவைத்துக்கொள்ளவும்.

தேங்காயை இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.

அத்துடன் அரைத்த மசாலாக் கலவையைச் சேர்த்து, ஒரு நிமிடம் பச்சை வாசனை போக வதக்கிக்கொள்ளவும்.

மசாலா வதங்கியதும், வேகவைத்து வடிகட்டிய பட்டாணியைச் சேர்த்து நன்றாகப் பிரட்டிவிடவும். உப்பு சரிபார்க்கவும்.

இறுதியாக அடுப்பை அணைத்தபின், அரை மூடி எலுமிச்சையைப் பிழிந்துவிட்டு, சீவிய மாங்காய்த் துண்டுகளைச் சேர்த்துப் பரிமாறவும்.Saturday, February 24, 2018

காய்கறி சால்னா


தேவையான பொருட்கள்

தக்காளி  - 2
வெங்காயம் பெரியது - 1
பச்சை மிளகாய் -2
கேரட் - 1
கொத்துமல்லி இலை - 1/2 கப்
புதினா - 1/4 கப்
கறிவேப்பிலை - 5 இணுக்கு
இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக் கரண்டி
மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
வத்தல் பொடி - 1 தேக்கரண்டி
மல்லிப்பொடி - 2 தேக்கரண்டி
கரம் மசாலப் பொடி - 1/2 தேக்கரண்டி

அரைக்க

தேங்காய் - 1/2 கப்
முந்திரிப் பருப்பு - 10 - 15
சீரகம் - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி

தாளிக்க

பட்டை - 1 அங்குலத் துண்டு

கிராம்பு - 3

ஏலக்காய் 3

எண்ணெய் - 2 மேஜைக் கரண்டி

செய்முறை

தக்காளி வெங்காயத்தை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

கேரட்டை சற்று நீள நீளமாக நறுக்கிக்கொள்ளவும்.

மிளகாயைக் கீறி வைத்துக்கொள்ளவும்.

கொத்துமல்லி, புதினா, கறிவேப்பிலையை சுத்தம் செய்து நறுக்கிக்கொள்ளவும்

அரைக்கவேண்டிய பொருட்களைத் தேவையான தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

இஞ்சி பூண்டை இடித்து வைத்துக்கொள்ளவும்

வாணலியில் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வறுக்கவும்.

அத்துடன் நறுக்கிய வெங்காயம் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.

அத்துடன் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.

அத்துடன் இலைகளையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்.

அத்துடன் கேரட்டைச் சேர்த்து வதக்கவும்.

பின்னர் நறுக்கிய தக்காளிகளைச் சேர்த்து வதக்கவும்.

சிறிது வதங்கியதும், மஞ்சள், மிளகாய், மல்லி, மற்றும் கரம் மசாலாப் பொடிகளைச் சேர்த்து வதக்கவும்.

ஒரு கப் தண்ணீர் சேர்த்து 3 நிமிடங்கள் மூடி வேகவிடவும்.

பின்னர் அத்துடன் அரைத்துவைத்த தேங்காய்க் கலவையை ஊற்றி, மேலும் இரண்டு கப் நீர் சேர்த்து மூடிவைத்து பச்சை வாசனை போகுமளவுக்கு வேகவிடவும்.

அதன் பின், உப்பு சரிபார்த்துவிட்டு, 15 - 20 நிமிடங்கள் பாத்திரத்தில் கரண்டியுடன் மூடிபோட்டு சிறுதீயில் கொதிக்கவிடவும்.

குழம்பு கொதித்து, எண்ணெய் பிரியும் சமயத்தில் சிறிது கொத்துமல்லி இலைகளைத் தூவி இறக்கவும்.

அருமையான ரோட்டுக்கடை காய்கறி சால்னா தயார்.

இது, பரோட்டா, சப்பாத்தி, பூரி, இடியப்பம், ஆப்பம் இவற்றுடன் சேர்த்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.

முழுமையான வீடியோ செய்முறை

இங்கே...

https://youtu.be/NmjA9TjtImk


Thursday, February 22, 2018

மீன் குழம்பும் பொரித்த மீனும்


தேவையான பொருட்கள்

மீன் - 1 கிலோ
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
கத்தரிக்காய் - 1
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 3 பல்
புளி - சிறு எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
வத்தல் தூள் - 1  தேக்கரண்டி
மல்லித்தூள் - 3 தேக்கரண்டி

தாளிக்க

சின்ன வெங்காயம் 3
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
கறிவேப்பிலை = 10 இலைகள்
எண்ணெய் - தேவையான அளவு

மீன் பொரிக்க

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
வத்தல் தூள் - 1  தேக்கரண்டி
சாம்பார்ப்பொடி - 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் - பொரித்தெடுக்க

செய்முறை

மீனை சுத்தம் செய்து, குழம்புக்கும் பொரிக்கவும் தனியாகப் பிரித்து வைக்கவும். குழம்புக்குரிய மீனில் சிறிது உப்புத் தூவி வைக்கவும்.

பொரிப்பதற்கான மசாலாக்களை உப்பு, எலுமிச்சைச் சாறு மற்றும் தேவையான தண்ணீருடன் கலந்து மீன் துண்டுகளில் தடவி ஊற விடவும்.

தேங்காயை சீரகத்துடன் அரைத்து அத்துடன், சின்ன வெங்காயம் மற்றும் 1/2 தக்காளியையும் சேர்த்து அரைத்துவைக்கவும்.

குழம்புக்கு, பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு, நறுக்கிய சிறிய வெங்காயம் சேர்த்துப் பொரிய விடவும். வெங்காயம் சிவந்ததும் வெந்தயம், கடுகு,
கறிவேப்பிலை சிறிதளவு பெருங்காயம்  சேர்த்துத் தாளிக்கவும்,

அத்துடன் கீறிய பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்க்கவும். சிறிதளவு உப்பு சேர்த்துத் தக்காளியை வதக்கவும். தக்காளியை வதக்கியதும்
நறுக்கிய பூண்டு, ஒரு கீறிய கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் புளித்தண்ணீர் மற்றும் மசாலாப் பொடிகளைச் சேர்க்கவும்.

சிறிது நேரம் மூடியிட்டுக் கொதிக்க விடவும்.

மசாலா வாசனை நீங்கியதும், அரைத்த தேங்காய், சீரகம், தக்காளி,  வெங்காயக் கலவையைச் சேர்க்கவும்.

ஐந்து நிமிடங்கள் கழித்து மீன் துண்டுகளைச் சேர்க்கவும்.

மீன் துண்டுகள் வெந்து குழம்பு கொதித்துக் கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கவும்.

மீன் பொரிக்க...

அகலமான வாணலியில் அல்லது தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி,
மீன் துண்டுகளை இரு புறமும் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

சுவையான மீன் குழம்பு, பொரித்த மீன் தயார்!

Wednesday, February 21, 2018

சிவப்பரிசி கொழுக்கட்டைதேவையான பொருட்கள்

சிவப்பரிசி புட்டு மாவு - 1/2 கப்

துருவிய தேங்காய் - 1/4 கப்

சர்க்கரை - 1/4 கப்

நெய் -1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு


செய்முறை


அரிசி மாவுடன் சிட்டிகை உப்பு, நெய் சேர்த்து நன்றாகக் கலந்துவிடவும்.

அத்துடன் தண்ணீர் சேர்த்து உதிரியாக, அதே சமயம் கையால் பிடித்தால் பிடிக்கவரும் அளவுக்கு நீர் சேர்த்துப்
பிசைந்து கொள்ளவும்.

அத்துடன் துருவிய தேங்காய் மற்றும் கால் கப் சர்க்கரை அல்லது பொடி செய்த வெல்லம்  சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

பாத்திரத்தில் நீரூற்றிக் கொதித்ததும் கொழுக்கட்டைகளை எட்டிலிருந்து பத்து நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

சத்தான சுவையான சிவப்பரிசி கொழுக்கட்டைகள் தயார்!

Sunday, February 18, 2018

எளிதான எக் ஃப்ரைட் ரைஸ்தேவையான பொருட்கள்:

முட்டை - 2
உதிரான சாதம்  - 1 கப்
சிறிய குடைமிளகாய் -1
சிறிய நறுக்கிய கேரட் - 1
பச்சை மிளகாய் - 1
பூண்டு - 1 பல்
வினிகர் - 1 தேக்கரண்டி
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 3 தேக்கரண்டி

செய்முறை:

கனமான வாணலியில் எண்ணெய் ஊற்றி, அவை உதிராக வரும்வரை உப்பு சேர்த்து வறுக்கவும்.

முட்டை உதிரானதும் ஒரு பல் நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.

அத்துடன் நறுக்கிய கேரட், குடைமிளகாய் சேர்த்து வறுக்கவும்.

காய்கள் பாதியளவு வதங்க்கியதும், வினிகர் மற்றும் சோயா சாஸ் சேர்த்து வதக்கவும்.

அத்துடன், உதிரான சாதம் ஒரு கப் அளவு சேர்த்து நன்றாக முட்டை, காய்கறிக் கலவையுடன் சேருமாறு ஒரு நிமிடம் வறுக்கவும்.

இறுதியாக, தேவையான அளவு மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

எளிதான சுவையான முட்டை ஃப்ரைட் ரைஸ் தயார்!

வீடியோ செய்முறை இங்கே.