திண்ணை தமிழ் : April 2018

Thursday, April 19, 2018

கடலைப்பருப்புப் பாயசம்


தமிழர் சமையலில் பருப்பு வகைகள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. குழம்பாகவும் கூட்டாகவும், பலவிதப் பலகாரங்களாகவும் அவை அன்றாட சமையலில் பங்கெடுத்துக்கொள்கின்றன. இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் கடலைப்பருப்புப் பாயசம், தமிழகத்தில் மட்டுமன்றி, கேரளத்திலும் மிகப் பிரபலமான ஒன்று.

இதற்குத் தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு - 1/2 கப்

ஜவ்வரிசி - 2 டேபிள்ஸ்பூன்

தேங்காய்ப்பால் - 1 கப்

நறுக்கிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்

வெல்லம் - 150 கிராம்

ஏலக்காய் - 3

முந்திரி - 15

திராட்சை - 15

நெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

கடலைப்பருப்பை குக்கரில் வைத்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

ஜவ்வரிசியையும் தண்ணீரில் 1/2 தேக்கரண்டி நெய் விட்டு வேகவைத்துக்கொள்ளவும்.

ஒரு கப் தேங்காய்ப்பால் தயாரித்துத் தயாராக வைக்கவும்.

சிறிதளவு தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிவைக்கவும்.

வெல்லத்தைச் சிறிதளவு தண்ணீரில் கரையவிட்டு வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.

ஏலக்காயைப் பொடிசெய்துவைக்கவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் வேகவைத்த கடலைப்பருப்பு, ஜவ்வரிசி இரண்டையும் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.

அத்துடன், வெல்லக்கரைசல் சேர்த்துச் சூடேற்றவும்.

கலவை நன்கு கொதித்தபின், அதனுடன் தேங்காய்ப்பாலைக் கலந்துவிடவும். தூளாக்கிய ஏலக்காயையும் சேர்க்கவும்.

வாணலியில் நெய்விட்டு, முந்திரி திராட்சை மற்றும் தேங்காய்த் துண்டுகளை வறுக்கவும்.

பாயசம் தேங்காய்ப்பால் சேர்த்தபின் அதிகம் கொதிக்கவிடாமல், முந்திரி திராட்சை மற்றும் தேங்காயைத் தூவி இறக்கவும்.

வறுத்த தேங்காய்த் துண்டுகள் இந்தப் பாயசத்துக்குக் கூடுதல் சுவையைக் கொடுக்கும்.

சுவையான கடலைப்பருப்புப் பாயசம் தயார்.


பச்சைப்பயறு அடை

பச்சைப்பயறு அல்லது பாசிப்பயறு என்று அழைக்கப்படும் இந்தப் பயறு ஆங்கிலத்தில் கிரீன் கிராம்( green gram) என்று அழைக்கப்படுகிறது. பொதுவாகவே பயறுவகைகளில் புரோட்டீன் எனும் புரதச் சத்து மிக அதிகம். இந்தப் பச்சைப்பயறு, புரோட்டீன்கள், விட்டமின்கள், தாதுச்சத்துக்கள் மற்றும் இரும்புச்சத்தும் அதிகம் உடையது என்பதால் அனைத்து வயதினருக்கும் ஏற்றது என்றாலும் குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. 

இந்தப் பச்சைப்பயறு அடைக்குத் தேவையான பொருட்கள்

பச்சைப்பயறு - 1கப்

புழுங்கல் அரிசி - 2 டேபிள்ஸ்பூன்

இஞ்சி - 1 அங்குலத் துண்டு

பச்சை மிளகாய் - 2 அல்லது 3

கறிவேப்பிலை - 2 இணுக்கு

சீரகம் - 1 தேக்கரண்டி

வெங்காயம் - 1

துருவிய தேங்காய் - 1/2 கப்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை

பச்சைப்பயறையும் அரிசியையும் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்கவும்.

ஊறிய பயறு அரிசிக்கலவையுடன் பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், கறிவேப்பிலை சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.

அரைத்த மாவுடன் துருவிய தேங்காய் , நறுக்கிய வெங்காயம் சேர்த்துக் கலக்கவும். வெங்காயத்தைச் சிறிது எண்ணெயில் வதக்கியும் சேர்க்கலாம்.

தேவையான உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்துக்குக் கலந்துகொள்ளவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, எண்ணெய் தடவி, ஒரு கரண்டி மாவை விட்டு நன்றாகப் பரப்பிவிடவும். அடையைச் சுற்றிலும் அடையின் மேலும் பரவலாக நல்லெண்ணெய் விட்டுத் திருப்பி, மறுபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

சுவையான பச்சைப்பயறு அடை தயார். இதனைச் சட்னி அல்லது தூளாக்கிய வெல்லத்துடன் சாப்பிடலாம்.